ராமேசுவரம்: ராமேசுவரம் வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடி விட்டு ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 புனிதத் தீர்த்தங்களில் நீராடுவது வழக்கம். இதில் 22-வது தீர்த்தமான கோடி தீர்த்தத்தில் நீராடியதன் மூலம் அனைத்து தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் பல ஆண்டுகளாக தேவஸ்தானம் சார்பாக 500 மில்லி கோடி தீர்த்தம் கோயிலில் ரூ.20-க்கு பாட்டிலில் விற்பனை செய்தனர். இதை பக்தர்கள் வாங்கிச் சென்று வீடு, கடை, தொழில், வர்த்தக நிறுவனங்களில் பூஜை உள்ளிட்ட புனித காரியங்களுக்கு பயன்படுத்தினர்.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கோடி தீர்த்தம் அரிதாகத் தான் விற்பனை செய்யப்படுகிறது. முன்னறிவிப்பு இன்றி விற்பனை நிறுத்தப்பட்டதால் பெரும்பாலான பக்தர்கள் தீர்த்தம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
ஆனால், ஆன்லைனில் தனியார் நிறுவனம் நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறது. இதுபக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கங்கை நீர் 250 மி.லி. ரூ.30-க்கு இந்தியா முழுவதும் அஞ்சல் துறை மூலம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் 395 அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, தனியார் ஆன்லைன் விற்பனையை தடுத்து நிறுத்தி, அஞ்சல் துறை மூலம் கோடி தீர்த்தம் விற்பனை செய்ய வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.