தமிழகம்

கடும் இடநெருக்கடி, இடியும் நிலையில் பாழடைந்த கட்டிடம்: 20 ஆண்டுகளாக காப்பகத்தில் வசிக்கும் 128 குடும்பங்கள்

ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை கண்ணப்பர் திடல் பகுதியில் உள்ள மாநகராட்சி வீடற்றோர் காப்பகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வரும் 128 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், இட நெருக்கடியில் அச்சத்துடன் வாழ்வதாகவும், உடனடியாக வீடு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி ரிப்பன்மாளிகையின் மேற்கு பகுதியில் உள்ள ராஜா முத்தையா சாலையோரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 68 குடும்பங்கள் வசித்து வந்தன. இக்குடும்பங்கள் கடந்த 2002-ம் ஆண்டு அகற்றப்பட்டு, சூளை கண்ணப்பர் திடல் பகுதியில் உள்ள மாநகராட்சியின் வீடற்றோர் காப்பகத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வால்டாக்ஸ் சாலையில் ஜட்காபுரம் பகுதியில் குடியிருப்பு வழங்கப்படும் என அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 ஆண்டுகள் ஆகியும்அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை.

இப்போது 68 குடும்பங்கள் 128 குடும்பங்களாக விரிவடைந்துவிட்டன. வீடற்றோர் காப்பகமும் கடும் இடநெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இப்போது அங்குள்ள கழிவறைகள், குளியலறைகள், படிக்கட்டுகளின் கீழ் பகுதிகள் எல்லாம் வசிப்பிடங்களாக மாற்றப்பட்டுள்ளனர். அந்த கட்டிடமும் பழுதடைந்து கான்கிரீட்டுகள் பெயர்ந்து விழுகின்றன. மழை காலங்களில் கான்கிரீட் கூரை ஒழுகுகிறது. எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று அப்பகுதியில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் டி.செல்வம் கூறியதாவது: சில மாதங்களுக்கு முன்பு எழும்பூர் ரயில்நிலையம் அருகில் சாலையோரம் வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அகற்றப்பட்டன. நாங்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீடற்றோர் காப்பகத்தில் தான் அவர்களை தங்கவைத்தனர். அவர்களுக்கு மூன்றே மாதத்தில் புளியந்தோப்பு கே.பி.பூங்காவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. எங்களிடம் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகிய அனைத்தும் உள்ளன. ஆனால் 20 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு வீடு வழங்கப்படவில்லை. எழும்பூர் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன் முயற்சியால் 5 மாதங்களுக்கு முன்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் கணக் கெடுப்பும் நடத்தினர்.

ஆனால் இதுவரை வீடு ஒதுக்கப்படவில்லை. எங்களுக்கு விரைவில் வீடு ஒதுக்காவிட்டால், அரசு எங்களுக்கு வழங்கிய அனைத்து அட்டையையும் அரசிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்பகுதியில் வசிக்கும் பெண்கள் கூறியதாவது: எங்கள் பெற்றோர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நெருக்கடியில் வசிக்கும்போது ஸ்மார்ட் போன்களை இல்லை. ஆனால் இப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இதனால் இங்கு வசிக்கும் இளம் பெண்கள், பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள் அச்சத்துடன் குளிக்கவும், உடை மாற்றவும் வேண்டியுள்ளது. இதுபோன்ற சிரமங்களால் நேரத்தோடு வேலைக்கும், பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. 250 சதுரஅடி இடத்தில் 7 குடும்பங்கள் வசிக்கின்றனர். எங்கள் சிரமத்தை கருத்தில் கொண்டாவது அரசு விரைவாக வீடு ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் ஏதும் அளிக்கவில்லை.

SCROLL FOR NEXT