சென்னை: பாமகவை ஆட்சியில் அமர்த்துவோம் என்ற ஜெ.குருவின் சபதத்தை நிறைவேற்ற உறுதி ஏற்போம் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனதுமுகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவுக்கு இன்று (பிப்.1) 61-வது பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவர் என்னிடம் வாழ்த்து பெறும்காட்சிகள் நெஞ்சில் நிழலாடுகின்றன. ஆயிரமாயிரம் அடக்குமுறைகள் ஏவப்பட்ட போதிலும் அவர் என் மீது கொண்ட விசுவாசத்தை மாற்றிக் கொள்ளவில்லை. நான் இட்ட பணிகள் அனைத்தையும் தட்டாமல் செய்தார். அவருக்கு நானும் அளவற்ற அன்பையும், நிகரற்ற அங்கீகாரத்தையும் வழங்கினேன். அவரை நான் எனது மூத்த பிள்ளையாகவே கருதினேன். அவ்வாறே நடத்தினேன்.
அவரின் நினைவுகளும், இல்லாமையும் என்னை வாட்டுகின்றன. குரு மறைந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவர் நினைவாக காடுவெட்டியில் மணிமண்டபம் அமைத்தோம். கல்விக் கோயிலின் சட்டக் கல்லூரியில் குருவுக்கு தனி வளாகம் அமைத்தோம். கம்பீரமான சிலையை கட்டமைத்தோம். அவற்றின் வழியாக குரு நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். குரு இல்லாவிட்டாலும் அவரது நினைவுகள் நம்மை விட்டு அகலவில்லை.
அவரது நினைவை எந்நாளும் போற்றுவோம். பாமகவை ஆட்சியில் அமர்த்து வோம் என்ற அவரது சபதத்தை நிறை வேற்றுவதற்காக உழைக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.