தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முக்கிய இரு கட்சிகளும் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி வருகின்றன. சில இடங்களில் கட்சிகள் களமிறங்கத் தொடங்கி விட்டன.
இதற்கிடையே, கடலூர் நகராட்சி கடலூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு மேயர் பதவி பெண் பிரதிநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சியை கைப்பற்ற திமுக மற்றும் அதிமுக புது யுத்திகளை கையான்று வருகின்றன. 45 வார்டுகள் உள்ள கடலூர் மாநகராட்சியில் அதிமுக 43 வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து வார்டு, வார்டாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிற்து. மேலும் பாஜக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது.
திமுக இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. திமுக அதன் கூட்டணிக்கட்சிகளுடன் இடங்கள் ஒதுக்கீடு செய்வது குறித்து பேசி வருகிறது.
இந்த நிலையில் கடலூர் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தேமுதிகவுடன் ரகசிய கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சு வார்த்தையில் கடலூர் மாநகராட்சியில் தேமுதிக போட்டியிடும் 2 அல்லது 3 வார்டுகளில் திமுகவினர் அவர்களை ஆதரிப்பதாகவும், தேமுதிக போட்டியிடும் 2 அல்லது 3 வார்டுகளை தவிர மற்ற அனைத்து வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை தேமுதிகவினர் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேச்சு வார்த்தை நடத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது போல சிதம்பரம் நகராட்சியிலும் திமுக, தேமுதிக இடையே ரகசியக் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.