திண்டுக்கல் மாநகராட்சித் தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பெற்றால் மேயராக முன்னாள் மேயர் மருதராஜின் மகள் பொன்முத்து தேர்வு செய்யப்படவுள்ளார்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 47-ல் அதிமுக போட்டியிடுகிறது. ஒரு வார்டை தமாகா-வுக்கு ஒதுக்கியுள்ளனர்.
இந்த முறை 50 சதவீத வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுக நிர்வாகிகள் பல இடங்களில் அவர்களது குடும்பத்தினரை களம் இறக்கியுள்ளனர்.
இதில் மேயர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் பொன்முத்து முன்னாள் மேயர் மருதராஜின் மகள். இவர் 11-வது வார்டில் போட்டியிடுகிறார். இவரது சகோதரர் வீரமார்பன், 8-வது வார்டில் போட்டியிடுகிறார். 12-வது வார்டில் முன்னாள் மேயர் மருதராஜின் சகோதரர் மகன் சுரேஷ்குமார் போட்டியிடுகிறார்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனின் மகன் ராஜ்மோகன் 4-வது வார்டில் போட்டியிடுகிறார். முன்னாள் கவுன்சிலர்கள் பலரின் வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அவர்கள் தங்கள் மனைவிகளைக் களம் இறக்கி யுள்ளனர்.
அதிமுகவினர்25-க்கும் அதிகமான இடங்களில் வென்றால் மேயராக பொன்முத்து தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
தனது மகளை மேயராக்க வேண்டும் என்ற முயற்சியில் அவர் போட்டியிடும் வார்டு மட்டுமல்லாது, பிற வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க முன்னாள் மேயர் மருதராஜ் முயற்சி செய்து வருகிறார்.
இதேபோல் துணைமேயர் பதவிக்கு முன்னாள் மேயரின் மகன் வீரமார்பன், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனி வாசன் மகன் சி.எஸ்.ராஜ்மோகன் ஆகியோரிடையே கட்சிக்குள் போட்டி ஏற்படும் எனத் தெரிகிறது.