தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊழலை நிச்சயம் ஒழிப்போம் என விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருப்பத்தூர் - தருமபுரி பிரதான சாலை சூ-பள்ளிப்பட்டு மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது விஜயகாந்த் பேசியதாவது:
அதிமுக - திமுக 2 கட்சிகளுமே ஊழல் கட்சிகள். ஊழலை ஒழிப்பேன் என இவர்கள் கூறுவதை யாரும் ஏற்க முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தால் ‘லோக் ஆயுக்தா’ கொண்டு வரப்படும் என ஸ்டாலின் கூறி வருகிறார். இதை சொல்ல திமுகவுக்கு தகுதி இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள ராஜா, திமுக கொள்கை பரப்புச் செயலாளராக உள்ளார். ஊழல் பேர்வழிகளை கொண்டுள்ள திமுகவால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்.
மக்கள் நலன் மீது அக்கறை இல்லாத ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் பறந்து வந்து, ஏர்கூலரில் காற்று வாங்கி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதில், ‘மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்’ என பேசி வருகிறார். மதியம் 2 மணிக்கு நடைபெறும் கூட்டத்துக்கு 11 மணிக்கே மக்களை கடும் வெயிலில் காத்துக்கிடக்கச் செய்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர். தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் ஆட்சி வெளிப்படையாக இருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை நிச்சயம் ஒழிப்போம் என்றார்.