வேலூர் மாநகராட்சி தேர்தலில் 37-வது வார்டில் திமுக சாார்பில் போட்டியிட திருநங்கைக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. இதில், 58 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வார்டு எண் 30 மற்றும் 47-க்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் முன்னாள் கவுன்சிலர்கள், கட்சிக்கு புதிதாக வந்தவர்கள் என பலரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
வேலூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை 37-வது வார்டுக்கான வேட்பாளர் பெயர் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இந்த வார்டில் திமுக சார்பில் திருநங்கை கங்கா நாயக் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 2002-ம் ஆண்டு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினராக இருந்தவர் மற்றும் திருநங்கைகள் நலனுக்காகவும் ஓல்டுடவுன் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்ற பெயரும் பெற்றவர்.
‘‘இந்த வார்டு மக்களுக்காக நிறைய உதவிகளை செய்துள்ளேன். கவுன்சிலராக வெற்றிபெற்றால் அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பேன்’’ என கங்கா நாயக் தெரிவித்தார். கவுன்சிலர் பதவிக்கு கங்கா நாயக் தேர்வு செய்யப்பட்டது குறித்து வேலூர் மாநகர மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான கார்த்திகேயன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘37-வது வார்டு மக்களின் நல்லது, கெட்டது என எல்லாவற்றுக்கும் உதவி செய்துள்ளார். அவரை நிறுத்தினால் வாக்களிப்போம் என அப்பகுதி மக்களும் தெரிவித்தனர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான் திருநங்கை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அவர்களுக்காக எல்லாமும் செய்தவர் என்பதால் நாங்களும் ஒரு மனதாக அவரை தேர்வு செய்தோம்’’ என்றார்.