சென்னை: விட்டாச்சு லீவு! என்று மாணவர்கள் விடுமுறையைக் கொண்டாடிய காலம் போய் கரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் குழந்தைகளின் குதூகலத்தைப் பறித்துவிட்டது.
வீட்டில் எத்தனை வசதியும் வாய்ப்பும் இருந்தாலும்கூட பள்ளிகள் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்க முடியும். அதை இந்த இரண்டாண்டுகள் சமூகத்துக்கு உணர்த்தியிருக்கிறது. எல்கேஜி, யுகேஜி எனப்படும் மழலையர் பள்ளிக் குழந்தைகள் இந்த அழகான பள்ளிப் பருவத்தைத் தொலைத்து நிற்கின்றனர். 2020 ஜூனில் மழலையர் பள்ளி சென்றிருக்க வேண்டிய குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் உள்ளனர்.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜன.3-ம் தேதி திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், கரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் பரவத் தொடங்கியதால் பள்ளிகளுக்கு ஜன.31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்புவரையிலான வகுப்புகள் மற்றும்கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இன்று (பிப்.1) முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன.நிலையான வழிகாட்டு நடைமுறைகளைபின்பற்றி பிப்.1 (இன்று) முதல்செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளி திரும்பினர்.