சென்னை: கடந்த 2019-ல் நடத்தப்பட்ட குருப்-4 தேர்வுக்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்கலந்தாய்வு, பிப்.15-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரிநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தற்காலிக பட்டியல் வெளியீடு
கடந்த 2019-ம் ஆண்டு செப்.1-ம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வுக்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு (தட்டச்சர் பதவி) பிப்.15-ம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தற்காலிக பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அழைப்பாணை தபால்மூலம் அனுப்பப்பட மாட்டாது.
காலியிடத்துக்கு ஏற்ப கலந்தாய்வு
விண்ணப்பதாரர்கள் மதிப்பெண், தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் காலியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.