சென்னை: அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களை இணையவழி பட்டப் படிப்பில் அதிக அளவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி தெரிவித்தார்.
சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக சமீபத்தில் பொறுப்பேற்ற பேராசிரியர் வி.காமகோடி, மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது ஐஐடி பதிவாளர் ஜேன் பிரசாத், டீன் கோஷி வர்கீஸ், என்பிடிஇஎல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முதல்வர் உடனான சந்திப்பு குறித்து ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியதாவது:
முதல்வரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. ஐஐடியில் செயல்படுத்தப்படும் தேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு கற்றல் (என்பிடிஇஎல்) திட்டம் குறித்தும், இந்த இணையவழி கற்றல் கல்வி குறித்து கிராமப்புற மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தேன். இதற்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.
சென்னை ஐஐடியில் இணையவழியில் 3 ஆண்டு கால பிஎஸ்சி டேட்டா சயின்ஸ், புரொகிராமிங் படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பில் நாடு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து படிக்கின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 2 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். அதில் 300 பேர் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்கள். இந்த எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
இப்படிப்பில் சேர வயது வரம்புஇல்லை. பிளஸ் 2 முடித்த யார்வேண்டுமானாலும் சேரலாம். ரெகுலர் படிப்பை படித்துக்கொண்டே இப்படிப்பை தொடரலாம்.
டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஆகிய தொழில்நுட்பத் துறைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அந்த வகையில், பிஎஸ்சி டேட்டா சயின்ஸ்,புரொகிராமிங் படிப்பவர்களுக்கு இத்துறைகளில் நல்ல வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதற்காக நடத்தப்படும் தகுதி தேர்வுக்கு நாங்களே பயிற்சி அளிக்கிறோம். நன்கு படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் உதவித் தொகையும் அளிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
என்பிடிஇஎல் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் கூறும்போது, ‘‘இந்த இணையவழி படிப்புக்கு ஓராண்டில் 3 முறை மாணவர் சேர்க்கைநடக்கிறது. இணைய வழியிலேயே விண்ணப்பிக்கலாம். வீடியோ வடிவில் பாடங்கள் நடத்தப்படும். வீடியோ பதிவுகளை மாணவர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து படிக்கலாம். இணையவழியில் நேரடி வகுப்பும் உண்டு. ஆசிரியர்களிடம் நேரடியாக கேள்விகள் கேட்டு, விளக்கம் பெறலாம். நாடு முழுவதும் 200 மையங்களில் தேர்வுநடத்தப்படும். ஐஐடியால் வழங்கப்படும் இந்த 3 ஆண்டு கால பட்டப் படிப்பு, ரெகுலர் பட்டப் படிப்புக்கு இணையானது. இப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ) மூலம் பெரிய நிறுவனங்களில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்றார்.