தமிழகம்

சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

சவுதியில் கொத்தடிமையாகத் தவிக் கும் தமிழக மீனவர்கள் 62 பேரையும் மீட்க மத்திய அரசுக்கு இரண்டரை மாதம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக மீனவர்களை மீட்க இரு நாட்டு தூதரக அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம், கன்னியாகுமரி, நாகை, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 62 பேர் சவுதி அரேபி யாவில் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர்களை மீட்கக் கோரி 62 மீனவர்களில் ஒருவரான சேது ராஜாவின் உறவினர் திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டில் தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இதனால் மீனவர்களை ஏப். 28-ம் தேதிக்குள் மீட்டு ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கோகுல் தாஸ் ஆகியோர் முன் விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ஆர்.சுவாமிநாதன் வாதிடும்போது, தமிழக மீனவர் களை மீட்க மத்திய அரசு தூதரக அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மீனவர்களை மீட்டு அழைத்து வர மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘செல்லும் இடமெல்லா மல் தமிழர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்’ என வேதனையை வெளிப்படுத்தினர். பின்னர் மீனவர்களை மீட்க ஜூலை 6 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி, அதற்குள் மீனவர்களை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசா ரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

SCROLL FOR NEXT