திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பேருந்து நிலைய கழிவறையில் இருந்து 4 ஐம்பொன் சிலைகளை போலீஸார் மீட்டுள்ளனர்.
நாங்குநேரி பேருந்து நிலையத்திலுள்ள கழிவறையில் ஒரு பையில் ஐம்பொன் சிலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீஸார் அங்கு சென்று அங்கிருந்த பையைக் கைப்பற்றினர்.
அதில், முக்கால் அடி உயரம் கொண்ட கையில் குழந்தையுடன் உள்ள இசக்கி அம்மன் சிலை, அரை அடி உயரம் உள்ள மற்றொரு இசக்கி அம்மன் சிலை, இரு பணிப்பெண்கள் சிலை என மொத்தம் 4 ஐம்பொன் சிலைகளும், ஒரு பழைய கத்தியும் இருந்தன.
அச்சிலைகள் அங்கு எப்படி கொண்டுவரப்பட்டன? ஏதாவது கோயில்களில் இருந்து திருடப்பட்டனவா? என்பது குறித்து போலீஸார் விசாரிக்கிறார்கள். நாங்குநேரி வட்டாட்சியர் இசக்கிப்பாண்டி மூலமாக, திருநெல்வேலி அருங்காட்சியகத்தில் இந்த சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.