தமிழகம்

கரோனா எண்ணிக்கை குறைவுக்கும், தேர்தலுக்கும் தொடர்பு இல்லை: ராதாகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கரோனா எண்ணிக்கை குறைவதற்கும், தேர்தலுக்கும் எந்தவிதமான தொடர்பு இல்லை என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நியோகோவ் வைரஸ் குறித்து ஓர் அனுமானத்தை ஒரு ஆராய்ச்சியாளர் கூறியிருக்கிறார். எனவே, அதையே கருத்தாக சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம். மூன்றில் ஒருவர் இறப்பார் என தொடர்ந்து பதிவிடுவது, தவறான கருத்து. உலக சுகாதார நிறுவனத்தின் வவ்வாலில் பரவக்கூடியது என்று அனுமானத்தின்படி ஓர் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். அவரது கருத்தை பல மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். எனவே அதை அதிகாரபூர்வ கருத்தாக பதிவிட வேண்டாம்.

தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வருவதால் கரோனா குறைகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். கரோனாவுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. கரோனா தொற்று எண்ணிக்கை, தேர்தலை பார்க்காமல்தான் உயரும், கூட்டம் அதிகமாக இருந்தால் அதிகரிக்கும். கூட்டமாக இருக்கும் இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் பரவும். தேர்தல் வருவதால் குறைவதாக கூறினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது? தயவுகூர்ந்து சமூக வலைதளங்களில் நியாயமான கருத்தை பதிவு செய்யுங்கள். ஏன் என்றால் நீங்கள் பதிவிடும் கருத்தை பலர் நம்பி, கவனக்குறைவாக யாரும் இருந்துவிடக் கூடாது. ஒரு தடுப்பூசி செலுத்துவதற்காக இரவு பகலாக பணி செய்கிறபோது, தேர்தல் வந்த பிறகு குறைந்துவிட்டது எனக் கூறுவது எல்லாம் சரியல்ல" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT