சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை (பிப்.1 ) முதல் திறக்கப்பட உள்ள சூழலில், தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவல்அதிகமானதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, மாணவர்களுக்கு இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், நோய்த்தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளதால் பள்ளிகளை பிப். 1-ம் தேதி முதல் மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து அனைத்துவித பள்ளிகளும் கடந்த ஆண்டுஆக.26-ம் தேதி வெளியிட்ட கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, ஏற்கெனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களில் சுழற்சி முறை வகுப்புகள், மாணவர்கள் சுயவிருப்பத்தின்படி பள்ளிக்கு வரலாம், கற்றல் வழிமுறையை பள்ளிகளே தீர்மானிக்கலாம் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இவை தற்போதைய சூழலுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. எனவே, பள்ளி திறப்பு குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சுழற்சி முறை வகுப்புகள், மாணவர்கள் சுயவிருப்பத்தின்படி பள்ளிக்கு வரலாம், கற்றல் வழிமுறையை பள்ளிகளே தீர்மானிக்கலாம் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.