சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். இதில், சென்னை மாநகராட்சி 2-வது வார்டுக்கு நித்யஸ்ரீ, 5-வது வார்டுக்கு முகமது பாஷா, 8-வது வார்டுக்கு உஷாராணி உட்பட 38 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஆவடி மாநகராட்சி 2-வது வார்டுக்கு சதீஷ், 30-வது வார்டுக்கு விக்டர் ஜான்சன் உள்ளிட்ட 4 வேட்பாளர்களும், தாம்பரம் மாநகராட்சி 5-வது வார்டுக்கு ஆண்டியப்பன், 7-வது வார்டுக்கு தாமோதரன், 8-வது வார்டுக்கு சந்திரன், 10-வது வார்டுக்கு ஸ்டீபன்ராஜ் உள்ளிட்ட 9 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல, சேலம், மதுரை மாநகராட்சிகள், உடுமலைப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட நகராட்சிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 112 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மநீம சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் 5-வது கட்ட பட்டியலை வெளியிடுகிறேன். நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள். திறமைக்கு வாய்ப்பளியுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.