தமிழகம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஆலோசனை மையம்: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக ஆலோசனை மையம் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை விவரம்; அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனைகள் அளிப்பதற்கு ஏதுவாக, ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படும் என்றுபள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து தெளிவான புரிதல் இருப்பதில்லை. எனவே, இது தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக ஆலோசனை மையம் உருவாக்கவும், முன்னாள் மாணவர்களைக் கொண்டு இந்தப் பணிகளை முன்னெடுக்கவும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட நிதியில் இருந்து ரூ.3.8 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர், அரசிடம் கோரியுள்ளார்.

அதை ஏற்று, அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் வழங்குவதற்காக ஆலோசனை மையம் அமைக்கவும், தேவையான நிதியை ஒதுக்கவும்அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தின் செயல்பாடுகளின் அடிப்படையில் செலவினங்களை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT