தமிழகம்

ஊரக உள்ளாட்சி பதவியை ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் தகுதி நீக்கம்: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால் ஊரக உள்ளாட்சி பதவி தகுதி நீக்கம் செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றுக்கான தேர்தல் கடந்த 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மறைமுக தேர்தல் மூலம் மொத்தம் 1,298 பதவிகளுக்கு, அதாவது மாநகராட்சி மேயர், துணை மேயர், நக ராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

வாக்குப்பதிவு வரும் பிப்.19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்.4-ம் தேதி கடைசி நாளாகும். முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை கூட்டணிகளுக்கான இடங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், இறுதி முடிவு எட்டப்படாத நிலையில் இரு நாட்களாக வேட்புமனு தாக்கல் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. 28-ம் தேதி அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி களிலும் சேர்த்து 19 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய் திருந்தனர். சென்னை மாநகராட்சி யில் 2 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனிடையே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள், அப்பதவியை ராஜினாமா செய்யாமல் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால், அவரது ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதி பதவி தகுதி நீக்கம் செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளை வகிப்பவர் கள் தங்கள் பதவிகளை உரிய முறையில் ராஜினாமா செய்யாமல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது. தாக்கல் செய்தால், அவர்களின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் உறுதிமொழி ஆவணத் தில் அவர்களது இருப்பிடம் குறித்து அளித்திருக்கும் உறுதி மொழியை ஆவணமாக எடுத்துக்கொள்ளப்படும். அதன்மூலம் தமிழ்நாடு ஊராட்சி சட்டம்-1994ன்படி, அவர்கள் தற்போது தொடர்புடைய ஊராட்சி பகுதியில் வசிக்கவில்லை என உறுதி செய்யப்படும்.

பின்னர், மேற்படி சட்டப்பிரி வின்படி, அவர்களை தற்போது அவர்கள் வகிக்கும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய ஊராட்சிகளின் ஆய்வாளர் (மாவட்ட ஆட்சியர்) உரிய நட வடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் போட்டியிடும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந் தாலும், அவர்களது ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதி பதவி தகுதி நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் கடந்த இரு நாட்களில் தமிழகம் முழுவதும் 99 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT