கோவை மாவட்டம் வால்பாறை ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் உள்ள சத்துணவு மையக் கட்டிடத்தில் கிடந்த குட்டி யானையின் எலும்புக்கூடு. 
தமிழகம்

பயன்பாட்டில் இல்லாத சத்துணவு மைய கட்டிடத்தில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: வால்பாறையில் வனத்துறையினர் விசாரணை

செய்திப்பிரிவு

வால்பாறையில் பயன்பாட்டில் இல்லாத சத்துணவு மையக் கட்டிடத்தின் உள்ளே குட்டி யானையின்எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகளில் நகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நேற்று முன்தினம்வால்பாறை அருகே ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பயன்பாட்டில் இல்லாத சத்துணவு மைய கட்டிடத்தை திறந்தபோது, குட்டி யானையின் எலும்புகள் கிடப்பதை கண்டு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

சத்துணவுக் கூடத்தின் பின்புற சுவரில் பெரியதுளை இருந்ததும், அவ்வழியாக உள்ளே வந்த குட்டியானை, பிறகு வெளியேற முடியாமல் உயிரிழந்திருக்கலாம் எனவனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து யானையின் எலும்புகளை மீட்ட வனத்துறையினர் அதனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

வெளியேற முடியாமல் சிக்கியது

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியன் கூறும்போது,‘‘வால்பாறை ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் உள்ள சத்துணவுக் கூடத்தில் சுமார் 7 வயதுடைய ஆண் யானையின் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. உணவு தேடிசத்துணவுக் கூடத்துக்குள் சென்ற குட்டி யானை, வெளியே வரத்தெரியாமல் உள்ளேயே சிக்கி உயிரிழந்திருக்கலாம். கரோனா பரவல் காரணமாக, அப்பகுதிக்கு யாரும் செல்லாததால் யானை இறந்து கிடந்தது, யாருக்கும் தெரியவில்லை. குட்டி யானை உயிரிழந்து 4 மாதங்களுக்கு மேல் இருக்கலாம். கைப்பற்றப்பட்ட யானையின் எலும்புகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன’’ என்றார்.

SCROLL FOR NEXT