சிவகங்கையில் வாக்காளர்களுக்கு போர்த்த வைத்திருந்த 19 துண்டுகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை நகராட்சி 14-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட விமலா முருகானந்தம் சீட் கேட்டு வருகிறார். இந்நிலையில் விமலாவும், அவரது கணவர் முருகானந்தமும் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு துண்டு போர்த்தி ஆதரவு கேட்டனர்.
அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் மைலாவதி தலைமை யிலான பறக்கும்படையினர் வாக்காளர்களுக்கு போர்த்த வைத்திருந்த 19 துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அதிமுகவினர், ‘துண்டு வாங்கியதற்கான ரசீது இருப்பதாகவும், இதனை தேர்தல் செலவுகளில் சேர்க்க உள்ளதாகவும், பரிசு பொருள்தான் கொடுக்கக் கூடாது, நாங்கள் துண்டுதான் போர்த்துகிறோம், என்றனர். இதை அதிகாரிகள் ஏற்காததால் இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் துண்டுகளை எடுத்துச் சென்றனர்.