தமிழகம்

அதிமுக கூட்டங்களில் 5 பேர் உயிரிழப்பு: தேசிய மனித உரிமை ஆணையத்திடம் பாமக புகார்

செய்திப்பிரிவு

அதிமுக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் வெப்பம் மற்றும் நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தை பாமக கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையத் தலைவருக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி அனுப்பிய புகார் மனுவில், ''தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கடலூர் மாவட்டம் விருத்தாசலம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஆகிய இடங்களில் நடைபெற்ற அதிமுக பிரசாரக் கூட்டங்களில் வெப்பம் மற்றும் நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்டங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் 4 முதல் 5 மணி நேரம் வரை கால்நடைகளைப் போல மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அதனால்தான் அப்பாவி மக்கள் நெரிசலில் சிக்கியும், வெப்பம் தாங்க முடியாமலும் உயிரிழந்திருக்கின்றனர். இது மனித உரிமை மீறிய செயலாகும். எனவே, இதற்கு காரணமான பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்கள் மீதும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 304-வது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT