தமிழகம்

காந்தியின் பெயரை வைத்து அரசியல்: நடிகர் கமலஹாசன் வேதனை

செய்திப்பிரிவு

அரசியலுக்கு அப்பாற்பட்டவர் காந்தி. ஆனால், அவரது பெயரை மட்டுமே வைத்து அரசியல் நடத்தப்படுகிறது என நடிகர் கமலஹாசன் தெரிவித்தார்.

உலக புத்தக நாள் விழாவையொட்டி, கோவை சப்னா புக் ஹவுஸ் சார்பில் பொதிகை தொலைக்காட்சி நிலையத் தலைவர் மற்றும் எழுத்தாளரான ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய ‘மகாத்மா காந்தியின் சத்தியசோதனை’ தமிழ் புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி, கோவை சுகுணா அரங்கில் நேற்று நடைபெற்றது.

புத்தகத்தை வெளியிட்டு நடிகர் கமலஹாசன் பேசியதாவது:

ஹே ராம் படம் எடுத்தபோதுதான் காந்தி மீதான மதிப்பும், மரியாதையும் அதிகமானது. தலைவர்களாக இருப்பவர்கள் அந்தப் பதவியை கிரீடமாக பார்க்கக் கூடாது. பதவியை எப்போதும் செருப்பாகப் பார்க்க வேண்டும். காந்தி, ஒரு தொண்டனாக இருந்ததாலேயே ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் அடையாளமாகவும், உலக குடிமகனாகவும் திகழ முடிந்தது.

அஹிம்சை கொள்கையை அவ்வளவு சீக்கிரம் யாரும் எளிதில் கையில் எடுத்துவிட முடியாது. அஹிம்சை குறித்து முழுமையாகப் புரிந்து கொண்டதால்தான் காந்தியால் எடுக்க முடிந்தது. அவரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்டு பேசுபவர்கள் மிகவும் குறைவு. வாக்குக்காகவும், பதவிக்காகவும் பேசி வருபவர்கள்தான் அதிகம். அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், இங்கு அவரது பெயரை மட்டுமே வைத்து அரசியல் நடத்தப்படுகிறது என்றார்.

நிகழ்ச்சியில், புத்தகத்தின் முதல் பிரதியை பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ண ராஜ் வாணவராயர் பெற்றுக் கொண்டார். சப்னா புக் ஹவுஸ் பதிப்பாசிரியர் கவிஞர் புவியரசு, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, பண்ணாரியம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி.பால சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT