திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த 2 மாணவிகள் எம்பிபிஎஸ் படிக்கவும், 4 மாணவிகள் பிடிஎஸ் என்னும் பல் மருத்துவம் படிக்கவும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 2020-21-ம் கல்வியாண்டில் படித்த 3 மாணவிகள், மருத்துவம் (எம்பிபிஎஸ்) படிக்க தேர்வு செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, புதிய உத்வேகத்துடன், மருத்துவம் படிக்கும் மாணவிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, நன்றாக படிக்கும் மாணவிகளை தேர்வு செய்து, அவர்களது கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித் துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க, மாணவர்களை முழுமையாக தயார் செய்யும் வகையில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும், நீட் நுழைவுத் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பாட ஆசிரியர் மூலமாக தொடர்ந்து ஆலோசனைகள் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக தமிழக அரசின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்) படிக்க 2 மாணவிகளும், பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிக்க 4 மாணவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
476 மதிப்பெண் பெற்ற மாணவி கவிபிரியா சென்னை மருத்துவக் கல்லூரியையும், 271 மதிப்பெண் பெற்ற மாணவி சுவாதி அரியலூர் மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளனர். மேலும் 231 மதிப்பெண் பெற்ற மாணவி கோட்டீஸ்வரி, 225 மதிப்பெண் பெற்ற மாணவி ஆர்த்தி, 223 மதிப்பெண் பெற்ற மாணவி யாமினி, 198 மதிப்பெண் பெற்ற மாணவி ஹரினி ஆகியோர் பல் மருத்துவம் (பிடிஎஸ்) படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் விவசாயி, தச்சு மற்றும் கூலி தொழிலாளியின் மகள்கள் ஆவர். தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்ற மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் பாராட்டினர்.