சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் தலைவர், துணை தலைவர் போன்ற பதவிகளை நியமனம் செய்கிற போது, விசிகவுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வரும் பிப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புத்தாண்டு பிறந்த பின்னர், முதல்வரை சந்தித்தேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, மாவட்ட அளவில் ஆங்காங்கே திமுக மாவட்டச் செயலாளர்களோடு கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேவையான இடங்களை பட்டியலிட்டு திமுக மாவட்டச் செயலாளர்களிடம் சமர்ப்பித்து இரண்டு மூன்று நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு போதிய இடங்களை ஒதுக்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றில் தலைவர், துணை தலைவர் போன்ற பதவிகளை நியமனம் செய்கிறபோது, விடுதலை சிறுத்தைகளுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றில் பெண்களுக்கு 50 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கக்கூடிய நிலைப்பாடு போற்றுதலுக்குரியது. இதற்கு சமூகத்தில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக பெண்களிடத்தில் மிகப்பெரிய அளவில் உற்சாகம் உருவாகியிருக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். ஏற்கெனவே மறைந்த முதல்வர் கருணாநிதி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் கூட அந்தச் சட்டம் நடைமுறையில் இருப்பது தெரியவருகிறது. எனவே, தமிழகத்திலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று விசிக சார்பில் முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
பொதுவாக கூறியிருக்கிறோம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் கவுன்சிலர் தேர்தலுக்கு பிறகு விசிகவையும் கவனத்தில் கொண்டு எங்களுக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். தேர்தல் முடிந்தபின் அதை கவனத்தில் கொள்வதாக முதல்வர் பதிலளித்துள்ளார். குறிப்பிட்டு இந்த மாநகராட்சியை ஒதுக்க வேண்டும் என கேட்கவில்லை. காரணம், இவை எல்லாமே கவுன்சிலர்கள் மூலமாக தேர்வு செய்யக்கூடிய பதவிகள் இது. நேரடியாக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கக்கூடிய பதவிகளாக இருந்தால், முன்கூட்டியே அதை தீர்மானிக்கக்கூடிய ஒரு தேவை எழும். தற்போதைய சூழலில் தேர்தல் முடிந்து கூட்டணி சார்பில், போதிய அளவிலான கவுன்சிலர்கள் வெற்றி பெற்றால்தான் அந்த பதவியையே நாம் பெறுவதற்கான போட்டியில் இறங்க முடியும். எனவே, அப்படி ஒரு சூழல் வரும்போதுதான் இதுகுறித்து நாம் விரிவாக பேச முடியும்.
ஆனாலும்கூட பொதுவாக நாங்கள், 2006-ஆம் ஆண்டில், மறைந்த முதல்வர் கருணாநிதி எங்களை அழைத்து கூட்டணியில் இணைத்துக் கொண்டபோது, கடலூர் நகராட்சியில் துணை தலைவர் பதவி, நெல்லிக்குப்பம் நகராட்சியில் தலைவர் பொறுப்பு, அதே போல் பாப்பிரெட்டிப்பட்டி, செந்துறை யூனியன் ஆகியவற்றில் ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளை வழங்கியதை நாங்கள் நினைவுபடுத்தினோம். இன்றைய முதல்வர், அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த சூழலில் அவரும் எங்களுக்கு இந்த பதவிகளை வழங்கினார். இந்தத் தேர்தலிலும் முடிந்த அளவுக்கு கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்திருக்கிறோம். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, 4-ஆம் தேதி வரை கால அவகாசம் இருக்கிறது. எனவே, பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், 1-ம் தேதிக்குப் பிறகு வேட்புமனு தாக்கல் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.