சென்னை: கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் திமுக செயல்பட்டால் பாஜக அமைதியாக இருக்காது என்று தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக காவல்துறை தன்னுடைய பெருமையையும், கண்ணியத்தையும் துறந்து திமுகவின் கைப்பாவையாக செயல்படுவதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்ட பதிவில் எந்தவித கண்ணிய குறைவான வாசகங்களோ, மத கலவரத்தை தூண்டும் செய்திகளோ இல்லை.
இதன்மூலம் அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டுவதை திமுக விரும்பவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. ஒரு கருத்தியலை கருத்தியலால் எதிர்கொள்ளாமல் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கருத்து சுதந்திரத்துக்கு தடை போட நினைப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
இந்துமத கோயில்கள் இடிக்கப்படுவது குறித்து எதை பேசினாலும் அதை மத சார்பாக பேசுவதாகவும், மத கலவரத்தை தூண்டுவதாகவும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று ஆளும் கட்சி மிரட்டுகிறது. அதற்கு, தமிழக காவல் துறையும் துணை போகிறது.
வினோஜ் பி.செல்வத்துக்கு பாஜக துணை நிற்கும். விமர்சனங்களை அரசு தன்னை செம்மைப்படுத்திக்கொள்ள பயன்படுத்த வேண்டும். மாறாக, கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டால் அதை பார்த்துக்கொண்டு பாஜக அமைதியாக இருக்காது என்பதை கண்ணியமாக தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறுஅவர் தெரிவித்துள்ளார்.