கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைபல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை என 11 பட்டப்படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு 2021-22-ம் கல்வியாண்டில் சேர 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களுக்கு கடந்த ஆண்டு இறுதியில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருந்தது. ஆனால்,வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்ததாலும், அது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணை பிப்ரவரியில் நடக்க இருந்ததன் காரணமாகவும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், குறிப்பிட்ட 10.5 சதவீதம் உள்இட ஒதுக்கீட்டுக்கான இடங்களைத் தவிர, பிற இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் பல்கலைக்கழகத்திடம் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில், இளம்அறிவியல் (பி.எஸ்சி) பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் மாணவர்சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் பல்கலைக்கழகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. செயல் துணைவேந்தர் கிருட்டிணமூர்த்தி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். பல்கலைக்கழகத்தின் வேளாண்மைத் துறை முதன்மையரும், மாணவர் சேர்க்கை தலைவருமான கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.
இதுதொடர்பாக செயல் துணைவேந்தர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் ஆகியோர் கூறும்போது, ‘‘பட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலின்படி, நீலகிரியைச் சேர்ந்த மாணவி பூர்வா 200-க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிபி.பவித்ரா 193.33 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்து உள்ளார். வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலின்படி, திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி அனுஜா 200-க்கு 191.43 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைபட்டியலின்படி, கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவி, அனுபா 200-க்கு 191.43 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்’’ என்றனர்.
கலந்தாய்வு வரும் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்குகிறது. அன்று முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு நேரடியாக கலந்தாய்வு நடக்கிறது. 14 மற்றும் 15-ம் தேதிகளில் தொழில்முறைக் கல்விப் பிரிவினருக்கும், 17 மற்றும் 18-ம் தேதிகளில் அரசுப் பள்ளியில் படித்தோருக்கும் நேரடி கலந்தாய்வு நடக்கிறது.
பிப். 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பொதுக் கலந்தாய்வு இணைய வழியிலும், 25-ம் தேதி கல்லூரி மற்றும் பாடப்பிரிவு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு இணைய வழியிலும் நடக்க உள்ளது. மார்ச் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நேரடியாக சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன. மார்ச் 24-ம் தேதி கலந்தாய்வு நிறைவடைகிறது.