ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை வனச்சரகத்தில் உள்ள காடம்பாறை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட சிறுத்தை. 
தமிழகம்

திருப்பூர் அருகே பிடிபட்ட சிறுத்தை ஆனைமலை வனப்பகுதியில் விடுவிப்பு

செய்திப்பிரிவு

திருப்பூர் அருகே பிடிபட்ட சிறுத்தை, ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பொங்குபாளையத்தில் வனத்துறையினர் உட்பட 11 பேரைதாக்கி மக்களை அச்சுறுத்தி வந்தசிறுத்தையை மயக்க ஊசி செலுத்திநேற்று முன்தினம் வனத்துறையி னர் பிடித்தனர். மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள மந்திரிபட்டம் வனப்பகுதியில் சிறுத்தையை விடுவிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் அங்கு கடந்த சில மாதங்களாக மற்றொரு சிறுத்தை யின் நடமாட்டம் உள்ளதால், இத்திட்டத்தை வனத்துறை கைவிட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட அப்பர் ஆழியாறு, கருமுட்டி, மாவடப்பு வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள காடம்பாறை வனப்பகுதியில் சிறுத்தையை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுத்தைக்கு மயக்கம் தெளிவதற்காக ஊசி செலுத்தப்பட்டு, காடம்பாறை வனப்பகுதிக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.

ஆக்ரோஷம் குறையாத சிறுத்தை

கூண்டில் அடைக்கப்பட்டிருந்ததால் சிறுத்தையின் உடல் வெப்பநிலை அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, சிறுத்தை யின் உடல் வெப்பநிலையை குறைக்க காடம்பாறை வனப் பகுதிக்கு செல்லும் வழியில் ஆழியாறு மற்றும் அட்டகட்டி பகுதிகளில் அதன்மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது.

காடம்பாறை வனப்பகுதிக்கு சிறுத்தை கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதன் ஆக்ரோஷத்தை அறிந்துகொள்ளும் வகையில் உயிருடன் உள்ள முயலை கூண்டுக்குள்விட்டு வனத்துறையி னர் பரிசோதித்தனர். தனதருகே வந்த முயலை, சிறுத்தை அடித்துக் கொன்றது. சிறுத்தையின் ஆக்ரோஷம் குறையாததை உணர்ந்த வனத்துறையினர், வாகனங்களுக்குள் பாதுகாப்பாக இருந்தபடியே கூண்டை திறந்துவிட்டனர்.

கூண்டில் இருந்து வெளிவந்த சிறுத்தை, மின்னல் வேகத்தில் ஓடி வனப்பகுதிக்குள் மறைந்தது.

பொதுமக்கள் அச்சம்

சிறுத்தை விடுவிக்கப்பட்ட பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் சுற்றளவுக்குள் கருமுட்டி,மாவடப்பு மற்றும் மின்வாரிய குடியிருப்புகள் இருப்பதால், அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, திருப்பூர் அருகேபிடிக்கப்பட்ட சுமார் 3 முதல் 4வயதுடைய ஆண் சிறுத்தை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளது. சிறுத்தையின் வாழ்விடப் பரப்பு பிரச்சினையில், மற்றொரு சிறுத்தையால் விரட்டப்பட்டு, இந்த சிறுத்தை நகரப்பகுதிக்குள் வந்திருக்கலாம். தண்ணீர் மற்றும் இரை விலங்குகள் நிறைந்தவனப்பகுதியில் விடுவிக்கப் பட்டுள்ள சிறுத்தை, சில நாட்களில் புதிய வனச்சூழலுக்கு பழகிவிடும்.

இங்கு சிறுத்தைக்கான இரை விலங்குகள் அதிகம் இருப்பதால், அதன் உணவுச்சங்கிலி உடைபடாது. எனவே, குடியிருப்புப் பகுதிகளுக்குள் சிறுத்தை வருவதற்கு வாய்ப்பு இல்லை, என்றனர்.

SCROLL FOR NEXT