கோவை மாநகராட்சி 100 வார்டு களிலும் முதல் நாளான நேற்று வேட்பாளர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் 5 மண்டல அலுவலகங்களில், ஜனவரி 28-ம்தேதி தொடங்கி பிப்ரவரி 4-ம் தேதி வரை (பொது விடுமுறை இல்லாத நாட்களில்) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பிப்ரவரி 5-ம் தேதி காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
வேட்புமனு படிவங்கள் மாநகராட்சி அலுவலகம் மற்றும் உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவல கங்களில் வழங்கப்படுகின்றன. நேற்று காலைமுதல் வேட்புமனு படிவங்களை சுயேச்சைகள், அரசியல் கட்சியினர் பலரும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாங்கிச் சென்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்யமுதல்நாளான நேற்று கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் எந்த வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை. ஒவ்வொரு வார்டுகளிலும் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ள நிலையில், வரும் 31-ம் தேதியில் இருந்து மாநகராட்சி பகுதிகளில் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களின் நுழைவுவாயிலில் மாநகர போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘‘வேட்புமனு தாக்கலுக்கான முதல்நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அடுத்தவாரத்திலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது,’’ என்றனர்.