தருமபுரி மாவட்டம் நாகமரை அருகே காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமையவுள்ள பகுதியில் பரிசலில் சென்று ஆய்வு மேற்கொண்ட பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி. உடன், தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர். 
தமிழகம்

காவிரியின் குறுக்கே பாலம் அமைந்தால் இரு மாவட்ட தொழில்வளம் பெருகும்: ஆய்வுக்கு பின்னர் ஜி.கே.மணி தகவல்

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் நாகமரை, ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் முதல்வர் அறிவித்த புதிய திட்டங்களுடன் தொடர்புடைய பகுதிகளில் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் நாகமரை அருகே காவிரியாற்றின் குறுக்கே ஒட்டனூர்-கோட்டையூர் இடையே ரூ.250 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டி சாலை அமைத்துத் தரப்படும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுக்காக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தின் அளவை அதிகரிக்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்ட திட்டம் ரூ.4600 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி நாகமரை பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமையவுள்ள பகுதியில் காவிரியாற்றில் பரிசலில் சென்று நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், ஒகேனக்கல்லில் குடிநீர் இரண்டாம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளையும் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியது:

50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் காவிரியாற்றின் குறுக்கே பாலம் அமைத்து சாலை வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

தருமபுரி-சேலம் மாவட் டத்தை இணைக்கும் வகையில் காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டால் இரு மாவட்டங்களிலும் தொழில் வளம் பெருகும். 800 மீட்டர் நீளமும், 130 அடி உயரமும் கொண்டதாக இந்தப் பாலம் அமையவுள்ளது.

ஒகேனக்கலில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 643 குதிரைத் திறன் கொண்ட 4 மின் மோட்டார் பம்புசெட்டுகள் மூலம் நாளொன்றுக்கு 160 எம்எல்டி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட குடிநீர் திட்டம் மூலம் 643 குதிரைத் திறன் கொண்ட 10 பம்புசெட்டுகள் மூலம் நாளொன்றுக்கு 400 எம்எல்டி தண்ணீரை அனுப்ப திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

இவ்வாறு கூறினார்.

ஆய்வின்போது, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசேகரன், இளநிலை பொறியாளர் தமிழரசன், கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள், ஏரியூர் ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மாது, பென்னாகரம் ஒன்றியக் குழு தலைவர் கவிதா, பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT