தமிழகம்

செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் முதல் தேர்தலை சந்திக்கும் புதிய நகராட்சிகள்

செய்திப்பிரிவு

செங்கை/காஞ்சி/திருவள்ளூர்: சென்னையை ஒட்டியுள்ள செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் புதியதாக உருவாக்கப்பட்ட 5 நகராட்சிகள், முதல் முறையாக தேர்தலை சந்திக்கின்றன. நகராட்சியின் முதல் தலைவர் பதவியை கைப்பற்றுவது யார்? என்பதில் திமுக - அதிமுக கட்சி நிர்வாகிகளிடையே தேர்தல் களத்தில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் மாங்காடு, குன்றத்தூர் ஆகியவை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி, திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர், பொன்னேரி ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப். 19-ம் தேதி நடைபெற உள்ளது. ஆகவே, சென்னையை ஒட்டியுள்ள இந்த 3 மாவட்டங்களில், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 5 நகராட்சிகள் முதல் தேர்தலை சந்திக்கின்றன.

இந்நகராட்சிகளில், முதல் நகராட்சித் தலைவர்கள் தேர்வாக உள்ளதால், தேர்தல் களம் ஆரம்பத்திலேயே சூடுபிடித்துள்ளது. தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தலை சந்திக்கவுள்ள நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற திமுகவினர் சுறுசுறுப்பாக பணியை தொடங்கி விட்டனர். இந்த தேர்தல் முதல் தேர்தல் என்பதால், அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும், முதல் நகராட்சித் தலைவர் என்ற பெயரை கைப்பற்ற திமுக - அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடையே போட்டி நிலவுகிறது.

உள்ளாட்சிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால் மகளிர் குழுவினர், பெண்கள் அமைப்பினர் தேர்தலில் களம் காண திட்டமிட்டு தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் பல ஆண்களுக்கு தேர்தலில் சீட் கிடைக்கவில்லை. இதனால் தங்களின் மனைவி மற்றும் தாயாருக்கு சீட் கேட்டு அந்த கட்சி தலைமைக்கு படை எடுத்து வருகின்றனர்.

நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதால், தேர்தல் விதிமீறல்கள் அதிகம் நடக்க வாய்ப்புகள் உண்டு. மாநில தேர்தல் ஆணையம், இந்த 5 நகராட்சிகளில் தனிக்கவனம் செலுத்தி தேர்தலை சிறப்பாக நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT