புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் அங்கு பங்கேற்க முடியாத நிலை உருவானது.
இதனால் அந்த ஊர்திகளை மக்கள் பார்வையிடும் வகையில் தமிழகம் முழுவதும் செல்லும் என தமிழக முதல்வர் அறிவித்தார்.
அதையடுத்து சென்னை யில் தமிழக அரசுசார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழாவின் போது, தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்திகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற அலங்கார ஊர்தி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த ஊர்தி நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்குகள்ளக்குறிச்சியை சென்றடைந்தது. அப்போது அலங்கார ஊர்தியை வரவேற்க காத்திருந்த திமுகவினர் திரண்டு ஊர்தி வந்தவுடன், அதைச் சுற்றி நின்று படம் எடுத்துக் கொண்டனர்.
அதேபோன்று மற்றொரு ஊர்தி, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்றது. அந்த ஊர்தியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் திமுகவினர் வரவேற்று, வழியனுப்பி வைத்தனர்.
சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பை பறைசாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளை தற்கால தலைமுறையினரும் அறியும் வகையிலும், மத்திய அரசு, தமிழகத்தை புறக்கணிக்கிறது என்ற கருத்தை மறைமுகமாக மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும் முதல்வர்மு.க.ஸ்டாலின் இந்த பயணத்தை திட்டமிட்டார்.ஆனால் அதற்கு மாறாக அலங்கார ஊர்திகள் அர்த்த ராத்திரியில் வந்து போனதால், பொதுமக்கள் பார்வையிட முடியாமல் போனதே என அடிமட்ட திமுகவினரே ஆதங்கப்பட்டதை காண முடிந்தது.