தமிழகம்

புதுச்சேரி மின் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பால் மின்துறையை 6 மாதங்களுக்கு பொதுப் பயன்பாட்டு சேவையாக அறிவிப்பு: தொழிலாளர் நலத்துறை சார்பாக நாளை மறுநாள் சமரச கூட்டம்

செய்திப்பிரிவு

தனியார்மயத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மின்துறையை 6 மாதங்களுக்கு பொதுப் பயன்பாட்டு சேவையாக ஆளுநர் அறிவித்துள்ளதாக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

புதுவை மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை மத் திய அரசு தொடங்கியது. இதை கண்டித்து புதுவை மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்துதனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில், மின்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அர சுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே ஆட்சி மாற்றம்ஏற்பட்டு புதுவையில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. கடந்த அமைச் சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார்மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதையடுத்து கடந்தாண்டு கருத்துகேட்பு கூட்டம்ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அக்கூட்டத்தில் மின்துறை ஊழி யர்கள் பங்கேற்கவில்லை.

அதைத்தொடர்ந்து அண்மை யில் மின்துறையில் தனியார் மயம் மற்றும் பணிப்பாதுகாப்பு தொடர்பாக கருத்துகேட்பு விளக் கக் கூட்டம் நடந்தது.

அக்கூட்டம் தோல்வியில் முடிந்தது. மின்துறை ஊழியர்களை அரசு ஊழியர்களாக தொடர எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. அதனால் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு செல்ல மின்துறை பொறியாளர்கள், தொழி லாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை சமரச அதிகாரி வெங்கடேசன், மின்துறை சிறப்பு அதிகாரிக் கும், மின்துறை தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு தலைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், “தொழில் தகராறு சட்டம் 1947 பிரிவு 12-ன் கீழ் வரும்31-ம் தேதி (நாளை மறுநாள்) மாலை 4 மணிக்கு சமரச நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதற்கு தேவையான ஆதாரங்க ளுடன் பங்கேற்க வேண்டும்.

இதில் தங்கள் தரப்பு விளக் கத்தை தெரிவிக்க நேரில் கலந்து கொள்ள தவறினால், தகுதியின் அடிப்படையில் இவ்விவகாரம் தீர்வு காணப்படும். சமரசத்தின்போது இரு தரப்பினரும் முறையே விரிவான பதிலை தாக்கல் செய்யவேண்டும்” என்று குறிப்பிட் டுள்ளார்.

இந்நிலையில் மின்துறை சார்பு செயலர் முருகேசன் பிறப்பித்துள்ள உத்தரவில், “தொழில் தகராறு சட்டம் 1947-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மின்துறையை 19.1.2022 முதல் 19.7.2022வரையிலான 6 மாதங்களுக்கு பொதுநலன் கருதி பொது பயன்பாட்டு சேவையாக அறிவித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வுத்தரவு அனைத்து செயலர்களுக்கும் அனுப்பப்பட் டுள்ளது.

காணொலியில் கருத்து கேட்பு; மின்கட்டண உயர்வுக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பு

கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஓழுங்குமுறை இணையமானது, புதுச்சேரி மின்துறை 2022-23-ம்நிதி ஆண்டுக்கான நிகர வருவாய் தேவை மற்றும் உத்தேச மின்கட்டண நிர்ணயம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நேற்று நடத்தியது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கருத்து கேட்பு கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இதில் பங்கேற்றோர் முறைப்படி விண்ணப்பித்தனர். அதன்படி காணொலி காட்சியில் பங்கேற்பதற்கான இணைப்பை அனுப்பி, அவர்களுக்கு (secy.jercuts@gov.in) என்ற மின்னஞ்சல் முகவரியில், கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் பலரும் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு மற்றும் தனியார் நிலுவையில் வைத்துள்ள பல கோடி ரூபாய் மின்கட்டண பாக்கியை வசூலிக்கவும் கோரினர்.

தற்போது கரோனா கால சூழல் என்பதால் அனைவரும் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மின்கட்டண நிர்ணயம் தொடர்பாக கருத்து கேட்பில் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இக்கூட்டத்தை ஒரு சம்பிரதாய சடங்காகவே நடத்துவதாக பல்வேறு அமைப்பினரும் புகார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT