தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் திமுக, அதிமுகவினர் மும்முரம்

ந. சரவணன்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்களின் இறுதி பட்டியலை வெளியிட திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது.

இதற்காக ஒவ்வொரு வார்டு களிலும் மக்கள் செல்வாக்கு உள்ள நபர்கள், பணபலம் உள்ள நபர்கள், கட்சிக்காக அவர்கள் ஆற்றிய பணிகளை அலசி ஆராய்ந்து, ஒவ்வொரு வார்டிலும் 3 வேட் பாளர்களை திமுக ஏற்கெனவே தேர்வு செய்து அதற்கான பட்டியல் கட்சி தலைமையிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அவர்களுக்கு மிகமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகவே கருதப் படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி விட வேண்டும் என முயற்சியில் அதிமுகவினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் வழங்காதது, தரமற்ற உணவு பொருட்கள் விநியோகத்தால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி யை ‘பிரம்மாஸ்திரமாக’ பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய வும் அதிமுகவினர் திட்டமிட் டுள்ளனர்.

அதேநேரத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்களை காட்டிலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணபலம், உட்கட்சி பூசல் இல்லாதவர்கள், மக்கள் செல்வாக்கு உள்ள வேட்பாளர் களை இந்த முறை களம் இறக்க அதிமுக தயாராகி வருவதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன.

தி‌முக மற்றும் அதிமுக கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஓரிரு நாளில் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வாக்கு மிக்க பெண் வேட்பாளரே...

வேலூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 4,7, 9,13, 14, 18,19,28,29,31,32,38,40,41,42,43,44,45,46,48,50,53,56, 57, 60 ஆகிய வார்டுகள் பெண்கள் பொதுப் பிரிவுக்கும், வார்டு எண் 5,16,17,20,37 ஆகியவை எஸ்.சி. பெண்கள் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது தவிர பிற வார்டுகளில் ஆண்கள் போட்டியிடலாம். அதில் 15,33,58 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், எந்த கட்சியின் பெண் வேட்பாளர்கள் 30 வார்டுகளுக்கு மேல் கைப்பற்றுகிறார்களோ அந்த கட்சியின் செல்வாக்கு மிக்க பெண் வேட்பாளரே வேலூர் மாநகராட்சியின் அடுத்த மேயராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT