தமிழகம்

இசை அமைப்பாளர் கணேஷுக்கு 28 ஆண்டுக்குப் பிறகு பார்வை திரும்பியது: அகர்வால் கண் மருத்துவமனை சாதனை

செய்திப்பிரிவு

பிரபல இசையமைப்பாளர்களான சங்கர்-கணேஷ் இரட்டையர்களின் ஒருவரான கணேஷுக்கு 28 ஆண்டு காலமாக இருந்துவந்த பார்வைக் குறைபாடு சென்னை அகர்வால் மருத்துவமனையில் செய்யப்பட்ட நவீன கண் அறுவை சிகிச்சை மூலம் சரியானது.

இதுதொடர்பாக சென்னை அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: புகழ் பெற்ற கணேஷ், 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பார்சல் வெடி விபத்தில் வலது கண் பார்வையை இழந்தார். இதற்கு லென்ஸ் பொருத்துவது குறித்து ஆலோசிக்க சமீபத்தில் அகர்வால் கண் மருத்துவமனைக்கு கணேஷ் வந்தார். அவரது வலது கண் விழித்திரையில் ஒளி ஊடுருவ முடியாத அளவு பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

சவாலான அறுவை சிகிச்சை

இதையடுத்து, 3 வாரங்களுக்கு முன்பு அவருக்கு குளூட் ஐஓஎல் லென்ஸ் பொருத்தும் அதிநவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. விழித்திரை முழுவதும் சேதமடைந்து இருந்ததால் அறுவை சிகிச்சையின் போது எந்த இடத்தில் கை வைத்தாலும் ரத்தம் வழிந்தது. இந்த சவாலான அறுவை சிகிச்சை சுமார் அரை மணி நேரம் நடந்தது. முதலில், பாதிக்கப்பட்ட கண் முழுவதுமாக சுத்தப்படுத்தப்பட்டு, கண்ணில் இருந்த துகள்கள் அகற்றப் பட்டன. பின்னர் குளூட் ஐஓஎல் லென்ஸ் பொருத்தப்பட்டது. இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பிறகு கணேஷின் வலது கண் நன்றாகத் தெரிகிறது. இவ்வாறு அமர் அகர்வால் கூறினார்.

மீண்டும் பார்வை கிடைத்த மகிழ்ச்சி யில் இருக்கும் இசையமைப்பாளர் கணேஷ் தனது அனுபவங் களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

எம்.ஜி.ஆர். காட்டிய அக்கறை

அந்த சம்பவம் நடந்து கிட்டத் தட்ட 28 ஆண்டுகள் ஆகின்றன. 1986-ம் ஆண்டு என் வீட்டுக்கு வந்த பார்சலில் எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்தது. அதில் என் வலது கண் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல உறுப்புகள் பாதிக்கப்பட்ட அந்த சூழலில் எம்.ஜி.ஆர். என்னை குணமாக்கப் போராடினார். நடக்கவே முடியாத நிலையில் இருந்தேன். ‘கணேஷ் மீண்டும் பழைய மாதிரி எழுந்து ஓடணும். அதற்கேற்ப சிகிச்சை கொடுங்க’ என்று மருத்துவர்களுக்கு எம்.ஜி.ஆர். கட்டளை போட்டார்.

விபத்தில் இருந்து மீண்டு வந்தபோதிலும், வலது கண் பார்வை மட்டும் மங்கலாகவே இருந்தது. கண்ணாடி போடாம எந்த வேலையும் செய்ய முடியாது. படிக்க, கார் ஓட்ட ரொம்ப சிரமப்பட்டிருக்கிறேன்.

பிரபல கண் மருத்துவர் அமர் அகர்வால் எங்கள் குடும்ப நண்பர். கண்ணை சரிசெய்துகொள்ளுமாறு ஆரம்பத்தில் இருந்தே வற்புறுத்தினார். சமீபத்தில்தான் அந்த வாய்ப்பு கைகூடியது. 28 ஆண்டுகளாக இந்த சுகத்தை அனுபவிக்க தவறிவிட்டோமே என்று நினைக்கிறேன்.

இவ்வாறு கணேஷ் கூறினார்.

SCROLL FOR NEXT