தமிழகம்

கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

சென்னை: ”அதிமுக கூட்டணி குறித்து கலந்துரையாடி இருக்கிறோம். கூட்டணி குறித்து எந்தவிதமான முடிவெடுப்பது தொடர்பான முழு அதிகாரமும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது” என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஏற்கெனவே நாங்கள் தயாராக இருந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு, வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள். மாவட்ட அளவில், மண்டல அளவில் நடக்கக்கூடிய நேர்காணல்கள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களை அறிவிப்பார். இந்த அறிவிப்புக்குப் பின்னர் அனைத்து மட்டங்களிலும், ஜனவரி 31-ஆம் தேதிக்குப் பின்னர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், அகில இந்திய தலைமையின் சார்பில் சுதாகர் ரெட்டி கலந்துகொண்டு வழிகாட்டியது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எங்களுடைய தேர்தல் முன் தயாரிப்புகள் ஏறக்குறைய முழுமைப்பெற்று, இன்னும் இரண்டு நாட்களுக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு,வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்.

அதிமுக கூட்டணி குறித்து கலந்துரையாடி இருக்கிறோம். கூட்டணி குறித்து எந்தவிதமாக முடிவெடுப்பது என்பது தொடர்பான முழு அதிகாரமும் மாநிலத் தலைவர் அண்ணாமலை பெற்றிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT