தமிழகம்

உதகையில் தனியார் வங்கியில் ரூ.24 லட்சம் மோசடி: ‘நேர்மையான’ வாடிக்கையாளர் தலைமறைவு

செய்திப்பிரிவு

உதகையில் தனியார் வங்கியில் ரூ.24 லட்சம் பெற்று, ஒரு மணி நேரத்தில் திருப்பி தருவதாகக் கூறிய ‘நேர்மையான’ வாடிக்கை யாளர் தலைமறைவானார். மோசடி நபரை பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

உதகையில் உள்ள சாய் பேலஸ் என்ற ஓட்டலை கடந்த சில ஆண்டுகளாக ஜெகதீஸ் குமார் என்ற நபர் குத்தகைக்கு ஏற்று நடத்தி வந்துள்ளார். இவர் உதகை எட்டினஸ் ரோட்டில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியில் ஓட்டல் பெயரில் கணக்கு தொடங்கி பண பரிவர்த்தனை செய்து வந்துள்ளார். சில ஆண்டுகளாக தொடர்ந்து பண பரிவர்த்தனை செய்து வந்ததால் வங்கி ஊழியர்களிடம் ஜெகதீஸ் குமார் நல்ல அறிமுகமாகியுள்ளார்.

பல முறை வங்கியிலிருந்து ஓரிரு நாட்களுக்காக பணம் பெற்று திருப்பிச் செலுத்தி வங்கி ஊழியர்களின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்துள்ளார்.

ரூ.24 லட்சம் கைமாத்து

இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை (ஜூன் 16) வழக்கம்போல் வங்கிக்குச் சென்ற ஜெகதீஸ்குமார் அவசரத் தேவைக்காக ரூ.24 லட்சம் தேவைப்படுவதாகவும், ஒரு மணி நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் வங்கி காசாளர் ராஜ்குமாரிடம் கூறியுள்ளார்.

தொகை சற்று அதிகமாக இருந்ததால் காசாளர் ராஜ்குமார், வங்கி மேலாளர் ராம்குமாரிடம் ஆலோசித்துள்ளார். மேலாளரும் பணம் கொடுக்க சம்மதிக்க, காசாளர் ராஜ்குமார் ரூ.24 லட்சம் பணத்தை பொட்டலமாக கட்டி ஜெகதீஸ் குமாரிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட ஜெகதீஸ் குமார் ஒரு மணி நேரமாகியும் வங்கிக்கு திரும்ப வில்லை. சில மணி நேரம் காத்திருந்த வங்கி ஊழியர்கள் பதற்றமாகினர். ஜெகதீஸ் குமாரின் தொலைபேசிக்கு தொடர்புகொண்டபோது, அவரது தொலைபேசி அணைக்கப்பட் டிருந்ததால் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரது ஓட்டலுக்கு சென்ற அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரித்ததில் அவர்களுக்கு ஏதும் தெரியவில்லை. அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் செய்வதறியாது, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர்.

ஜெகதீஸ் குமார் இதே போல தனது நண்பர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வங்கி மேலாளரை தொடர்பு கொண்ட போது அவர் வங்கியில் இல்லை என ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், புகார் தொடர்பாக கருத்து கூறவும் மறுத்து விட்டனர்.

SCROLL FOR NEXT