தமிழகம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

செய்திப்பிரிவு

மயிலாப்பூர் கற்பகாம்பாள் உட னுறை கபாலீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலா கலமாக நடந்தது. இதில் பல்லா யிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்து வதற்கான பாலாலயம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட் டது. சுமார் 6 மாதங்களாக நடை பெற்ற கோயில் மராமத்து பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கே யாகசாலை நிகழ்வுகள் தொடங்கின. அடுத்ததாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சரியாக காலை 7.50 மணியளவில் கலச புறப்பாடு நடந்தது. காலை 8.17 மணிக்கு கும்பத்தை சுற்றி வானத்தில் கருடன் வட்டமடிக்கத் தொடங்கியது. ராஜகோபுரத்தில் சரியாக காலை 8.47 மணிக்கு கும்பாபிஷேக நன்னீர் விடப்பட்டது. பின்னர் கோயிலில் உள்ள 19 சன்னதிகளின் விமான கலசங்களுக்கும் நன்னீர் விடப்பட்டது.

அப்போது, மேள தாளம் இசைக்கப்பட்டதோடு, சங்கொலி எழுப்பப்படவே, பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’, ‘ஹர ஹர மகாதேவா’ என்ற பக்தி முழக்கங்களை எழுப்பினர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து காலை 11 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது.

கும்பாபிஷேகத்தை நேரில் காண்பதற்காக அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிய தொடங்கினர். கும்பாபிஷேகம் நடப்பதற்கு 1 மணி நேரம் முன்பே மாட வீதிகள் முழுவதும் மக்கள் நிறைந்தனர். இதனால் 7.45 மணிக்கு பிறகு வந்த பக்தர்கள் ராமகிருஷ்ண மடம் சாலையில் நின்றபடியே கோபுரத்தை தரிசித்தனர்.

2 ஆயிரம் போலீஸார்..

கோயிலைச் சுற்றி வைக்கப் பட்டிருந்த 5 எல்.இ.டி. திரைகளில், கும்பாபிஷேகக் காட்சிகள் நேரடி யாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. அந்த திரைகளில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை காண்பதற்கே பலர் முண்டியடித்தனர். கோயிலைச் சுற்றி 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. பாதுகாப்புப் பணியில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். நகை அணிந்து வந்த பெண்களை புடவை முந்தானையால் போர்த்தி மறைத்துக்கொள்ளுமாறு காவலர்கள் அறிவுறுத்தினர்.

கும்பாபிஷேகத்தையொட்டி 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மயிலாப்பூர் டேங்க் பஸ் நிறுத்தம் அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பஸ்களை முறைப்படுத்து வதற்காக அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். சென்னை புறநகர் பகுதி வாசிகள், பறக்கும் ரயில் மூலம் மயிலாப்பூர் வந்ததால், கடற்கரை வேளச்சேரி மார்க்கத்தில் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாலையில் மண்டலாபிஷேகம், திருக்கல்யாணம், வெள்ளி ரிஷப வாகன ஊர்வலம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா ஆகியவை நடந்தன. இன்று மண்டல பூஜையின் 2-ம் நாள் நிகழ்வுகள் நடக்கின்றன.

SCROLL FOR NEXT