சென்னை: கடலூர் கட்டிட விபத்தில் உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் ராமாபுரம் கிராமத்திலுள்ள பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் வீரசேகர் மற்றும் சதிஷ் உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்திரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் முதல்வரின் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் இன்று சமத்துவபுரத்தின் அருகில் இருந்த பழைய அரசு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கட்டிடத்தின் அருகில் அமர்ந்திருந்த 3 பள்ளி மாணவர்கள் சிக்கினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், இடிபாடுகளுக்குள் சிக்கிய இரண்டு பேரை உயிரிழந்த நிலையிலும், ஒருவரை உயிருடனும் மீட்டனர். இந்த விபத்தில் உயிரிழந்ததது, பிளஸ் 2 மாணவர்களான வீரசேகர் (17), சுதீஷ்குமார் (17) என்பது, படுகாயத்துடன் மீடகப்பட்டது மாணவன் புவனேஷ் (17) என்பதும் தெரியவந்தது.