மாமல்லபுரம்: மாமல்லபுரத்தல் மீன் கூடையுடன் மாநகர பேருந்தில்பயணிக்க வந்த பெண்மணியிடம், மீன் கூடையுடன் பேருந்தில் ஏறக்கூடாது என வாக்குவாதம் செய்த நடத்துநரின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த கொக்கிலமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள்(52). மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், மீன் வியாபாரத்துக்கு செல்வதற்காக மீன் கூடையுடன் மாமல்லபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்தார். அங்கு, தாம்பரம் செல்லும் தடம் எண் 515 என்ற (TN-01-AN -1842) சிவப்பு நிற பேருந்தில் ஏறினார். அப்போது, மீன் கூடையுடன் பேருந்தில் ஏறக்கூடாது என நடத்துநர் கூறியதாகவும், வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விடப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட பெண்மணி நடத்துநரிடம் மீன் கூடையுடன் ஏன் பேருந்தில் பயணிக்கக்கூடாது என கேள்விஎழுப்பினார். இதனால், நடத்துநருக்கும் அப்பெண்மணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், சிவப்பு நிற மாநகர பேருந்தில் மீன்கூடையை ஏற்ற முடியாது. யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவியுங்கள் என நடத்துநர் கூறியுள்ளார். இதுதொடர்பான, வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதனால், சம்பந்தப்பட்ட நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.