தமிழகம்

யாரிடமும் ரூ.1,500 கோடி வாங்கவில்லை: வைகோ ஆவேசம்

செய்திப்பிரிவு

யாரிடமும் நான் ரூ.1,500 கோடி வாங்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் திடீரென பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது. இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார். இதை தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

சிறுதாவூர் பங்களாவில் இருந்து 2 கன்டெய்னர்களும், 10 லாரிகளும் வந்தன. அந்த பங்களாவில் ஏன் சோதனை நடத்தவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கேட்டதற்கு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து அறிக்கை கேட்டிருப்பதாக கூறியிருக்கிறார். இதுபற்றி சொன்ன என் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்போது திரும்பவும் சொல்கிறேன். மேலும் ஒரு வழக்குப் போடுங்கள். சிறுதாவூர் பங்களாவில் இருந்து பணம்தான் போனது. நாடு முழுவதும் பணம் தந்தது ஜெயலலிதா கட்சி. திமுகவும் கொடுத்தது. இப்போதும் பணத்தை தயாராக வைத்துள்ளனர். அதனால்தான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்கின்றனர்.

மீத்தேன் திட்டத்துக்காக கிரேட்ஈஸ்டர்ன் எரிசக்தி நிறுவனத்துடன் கையெழுத்து போட்டதில் எவ்வளவு பணம் கைமாறியது என்று மு.க.ஸ்டாலினை கேட்கிறேன். 2ஜி அலைக்கற்றை பணம் அந்தக் குடும்பத்துக்கு மொத்தமாகப் போயிருக்கிறது. அதை வைத்துதான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

2006-ம் ஆண்டு நடந்த மதிமுக உடைப்ப சம்பவத்தை சந்திரகுமார் எம்எல்ஏ விவகாரம் அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. தேமுதிகவை உடைக்கும் முயற்சியில் மு.க.ஸ்டாலினும், அவரது மருமகன் சபரீசனும் ஈடுபட்டுள்ளனர். சந்திரகுமார் கும்பலை வைத்து தேமுதிகவை ஒழித்துவிடலாம் என்று நினைத்தனர். அது நடக்கவில்லை. இந்த விவகாரத்தால் தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களும், மக்கள் நலக் கூட்டணி தொண்டர்களும் கொதித்துப் போய் இருக்கிறார்கள். எங்களைப் பிரிக்க முடியாது.

இவ்வாறு வைகோ கூறினார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு வைகோ அளித்த பதில் வருமாறு:

கே: உங்கள் அணியின் தொகுதிப் பங்கீடு என்ன ஆச்சு?

தொகுதிப் பங்கீட்டில் ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் இப்போது சொன்னதுதான் முக்கியமான பிரச்சினை.

கே: தேமுதிக விவகாரத்தில் அதன் தலைவர் விஜயகாந்த் பதில் அளிக்காமல் வெறும் அறிக்கை மட்டும் வெளிவருகிறதே?

சந்திரகுமார் விவகாரம் பற்றி மாமண்டூரில் வரும் 10-ம் தேதி நடக்கும் எங்கள் அணி மாநாட்டில் விஜயகாந்த் விரிவாக விளக்குவார்.

கே: நீங்கள் ரூ.1,500 கோடி வாங்கியதாக சந்திரகுமார் கூறியிருக்கிறாரே?

நான் யாரிடமும் ரூ.1,500 கோடி வாங்கவில்லை. அப்படி வாங்கியதாகக் கூறுவதில் உண்மை இல்லை.

இவ்வாறு வைகோ பதிலளித்தார்.

SCROLL FOR NEXT