திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அனுமன் சேனா நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "சிறுபான்மை மக்கள் மட்டும் வாக்களித்து திமுக ஆட்சிக்கு வரவில்லை. சிறுபான்மை மக்களை விட அதிகமாக பெரும்பான்மை மக்களும் திமுகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதை திமுகவினர் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஒரு சாராரை திருப்திப் படுத்த மற்றொரு சாராரை அவமானப்படுத்துவது என்பதுஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தமிழகத்தில் இந்து சமய கோயில்களுக்கு மட்டும் வாரத்துக்கு 3 நாட்கள் மூடப்படுகின்றன. மற்ற மதத்தின ருக்கு அந்த கட்டுப்பாடுகள் இல்லை.
அண்டை மாநிலங்களில் இது போன்ற நிலை இல்லை.தமிழகத்தில் மட்டுமே இந்த நிலை அமல்படுத்தப்பட்டுள் ளது வருத்தமளிக்கிறது.
கரோனா பரவல் இருப்பதால் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழகத்தில் கோயில்களை திறக்க வேண்டும். கருணாநிதி முதல்வராக இருந்த போது வேறுபட்ட கொள்கை இருந்தாலும்கூட ஆன்மீக பக்தர்களை அவர் மதித்து செயல்பட்டார்.
அதைப்போலவே, தற்போதைய திமுக ஆட்சி ஆன்மீக பக்தர்களை அரவணைத்து செல்ல வேண்டும்.
மாணவி அனிதா விஷயத் தில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டவர்கள், தற்போது லாவண்யா விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன் என தெரியவில்லை.
அனிதாவும் தமிழச்சி தான், லாவண்யாவும் தமிழச்சி தான். இதில் என்ன வேறுபாடுகள் பார்த்தார்கள் என்பதும் புரியவில்லை. மக்கள் அனைத்தையும் கவனித்து வருகின்றனர் என்பதை மறக்கக்கூடாது.
ஒரு மரணத்துக்கு ஒப்பாரி வைப்பதும், இன்னொரு மரணத்தை கண்டும் காணாமல் இருந்து விட்டு, கிடைசியில் நாங்கள் எல்லாம் தமிழர்கள் தான் என கூறுவது ஏற்புடையதல்ல. தஞ்சை மாணவி லாவண்யா மரணத்துக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்’’ என்றார்.