சென்னை: கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரை தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை யாரும் மறந்திருக்க இயலாது.
மனிதாபிமான மற்றும் துணிச்சலான அந்தச் செயலுக்காக பரவலாகப் பாராட்டப்பட்ட அவருக்கு இன்று வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினிடமிருந்து இருந்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விருதைப் பெற்றுக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கனமழையையும் பொருட்படுத்தாது காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி செய்த காரியம் தான் இன்று அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்துள்ளது.
நடந்தது என்ன? கடந்த நவம்பர் 11, 2021 காலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி போலீஸாருடன் அங்கு சென்றுள்ளார்.
அங்கு கல்லறைகளுக்கு நடுவே இளைஞர் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து ஆய்வாளர், இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை செய்துள்ளார். அப்போது அந்த இளைஞரின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை தனது தோளில் தூக்கிச் சென்று அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து அதில், அந்த இளைஞரை ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அந்த இளைஞர் நலம் பெற்றார். மயங்கிக் கிடந்தவர் ஷெனாய் நகரைச் சேர்ந்த உதயா (25) என்பதும், அவர் கல்லறையில் தங்கிப் பணி செய்து வருவதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதாபிமான செயல்பாடு தமிழக காவல் துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். அத்துடன், ராஜேஸ்வரியை நேரில் அழைத்து அவரது சேவையைப் பாராட்டிச் சான்றிதழும் வழங்கினார்.
இந்நிலையில், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி இன்று (ஜனவரி 26, குடியரசு தின விழாவில்) அண்ணா பதக்கம் பெற்றார். அவர் உட்பட 8 காவலர்கள் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தைப் பெற்றனர்.