சென்னை: பெண் குழந்தைகள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று ஐசிடிஎஸ் இயக்குநர்அமுதவள்ளி, ஐஏஎஸ் அறிவுறுத்தியுள்ளார்.
11 முதல் 18 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இணையம் வழியே கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழக அரசின் ஐசிடிஎஸ் மற்றும் பாரதப் பிரதமரின் போஸ்ஹன் அபியானும் இணைந்து நடத்தின.
இந் நிகழ்வை ஐசிடிஎஸ் இயக்குநர் அமுதவள்ளி, ஐஏஎஸ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகள் தங்களின் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.ஒல்லியாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் இன்றைய தலைமுறை பெண் குழந்தைகள், தங்கள் உடல் ஆரோக்கியத்தை சரிவரக் கவனிப்பதில்லை. அதிலும், காலை உணவு சாப்பிடுவதை பலரும் தவிர்த்து வருகின்றனர்.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் பெண் குழந்தைகள் தவறாமல் காலை உணவைச் சாப்பிட வேண்டும். உடல் எடை கூடிவிடும் என்ற பயத்தில் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால், வேறு பல உடல்நலன் தொடர்பான பாதிப்புகள் உண்டாகக் கூடும். எனவே பெண் குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்
காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகளுடன் கூடிய சமச்சீரான உணவு முறைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல், தன்சுத்தம் மிகவும் அவசியம். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு சரியான கால இடைவெளியில் ஒழுங்காகவராவிட்டாலோ, கூடுதலான ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ பெற்றோர், ஆசிரியர், தோழிகளிடம் சொல்லி, முறையான மருத்துவஆலோசனையை உடனே பெற வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நல்ல சிந்தனைகள் நமக்குள் உருவாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் பெண் குழந்தைகளின் உடல் நலன் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு டாக்டர் கவுசல்யா நாதன் பதிலளித்துஉரையாற்றியதாவது:
ஒவ்வொரு குழந்தைக்கும் முதன்முதலாக கிடைக்கும் ஊட்டச்சத்துள்ள ஒரு உணவாக தாய்ப்பால் உள்ளது. நாம் உட்கொள்ளும் உணவு தொடர்பான கவனமும் புரிதலும் நம் ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவை.கரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில்பெண் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் இந்த நிகழ்வை தமிழக அரசு முன்னெடுத்திருப்பது நல்ல விஷயம்.
ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியென்பது நமது சுகாதாரம் மற்றும் நாம் உண்ணும் உணவின் மூலமாகவும் நாம் பெறுகிறோம்.
பெண் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான – சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். பெண் குழந்தையின் உடல், ஆரோக்கியமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். பெண் குழந்தைகள் அச்சப்படாமல் தங்களது உடல் தொடர்பான சந்தேகங்களை உரிய மருத்துவரிடம் கேட்டுத் தெளிவுபெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், சென்னை சகோதயா ஸ்கூல்காம்ப்ளக்ஸ் அமைப்பின் தலைவர் சுப்பிரமணியன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் விற்பனைப் பிரிவு பொதுமேலாளர் டி.ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த நிகழ்வை பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தின் தேவையை வலியுறுத்தும் தமிழக அரசின் தூதுவரான ஹாசினி லெட்சுமிநாராயணன் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்வின் ஸ்ட்ராடிஜிக் பார்ட்னராகசென்னை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ், தி ஃபர்ஸ்ட் ஸ்டெப்பும், மீடியா பார்ட்னராக ’இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந் துள்ளன.
இந்நிகழ்வை காணத் தவறியவர்கள் https://www.htamil.org/00218 என்ற லிங்க்கில்பார்க்கலாம். மேலும், ‘இந்து தமிழ் திசை’யின் யூ-டியூப் நிகழ்வுகளை தொடர்ந்து பார்க்க https://www.htamil.org/00220 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளுங்கள்.