சென்னை: பருவத்தேர்வு நடக்கும்போது வினாத்தாள்களை பல்கலைக்கழகங்களின் இணையதளத்தில் ஒரு மணிநேரம் வெளியிட வேண்டும் என்று உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பக்கல்விஇயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர், பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுக்கு உயர்கல்வித் துறை செயலர் டி.கார்த்திகேயன் அனுப்பிய சுற்றறிக்கை;
உயர்கல்வியில் கல்லூரி மாணவர்களுக்கான நவம்பர், டிசம்பர் பருவத்தேர்வுகளை பிப்ரவரி 1 முதல் 20-ம் தேதி வரை இணையவழியில் நடத்துவதுஎன்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நடப்பு பருவத்தேர்வுகள் பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கப்பட உள்ளன.
காலையில் 10 முதல் 1 மணி வரையும்மதியம் 2 முதல் 5 மணி வரையும் என இரு வேளைகளிலும் தேர்வு நடைபெறும். மாணவர்களுக்கு வினாத்தாளை இணையதளம் அல்லது கல்லூரியின் மூலமாக பல்கலைக்கழகங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், கேள்வித்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய வசதியாக பல்கலை. இணையதளத்தில் காலையில் தேர்வு நடைபெறும்போது 9.30மணி முதல் 10.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரையிலும் வெளியிட வேண்டும். அனைத்துமாணவர்களும் வினாத்தாளை பதிவிறக்கம் செய்ததை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இதுதவிர, மாணவர்கள் ஏ4 தாள்களில் விடைகளை 40 பக்கங்களுக்குள் எழுத வேண்டும். விடைத்தாளில் மாணவர்களின் பதிவு எண் உட்பட விவரங்களை எழுதி கையொப்பமிட வேண்டும். மாணவர்களுக்கு தேர்வுக்கான வினாத்தாள்களை அனுப்புவதற்கு தொடர்பு அலுவலர்களை நியமனம் செய்து, வாட்ஸ்அப் குழு உருவாக்க வேண்டும். தேர்வு முடிந்த அடுத்த ஒரு மணிநேரத்தில் விடைத்தாள்களை மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலம் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், மாணவர்கள் தங்கள் தேர்வு விடைத்தாள்களை ஒவ்வொருபாடத்தேர்வும் முடிந்த ஒரு வாரத்துக்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பத் தவறினால் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் தேர்வு விடைத்தாள்களை ஒவ்வொரு பாடத்தேர்வும் முடிந்த ஒரு வாரத்துக்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.