தமிழகம்

மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் ராமநாதபுரம் கல்லூரியில் சேர்க்கப்படுவார்கள்; மதுரை எய்ம்ஸில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை இந்த கல்வி ஆண்டிலேயே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும், எய்ம்ஸில் சேர்க்கை பெறும் 50 மாணவர்கள் ராமநாதபுரத்தின் புதிய மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படுவார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வலி நிவாரண மையம், நோய் தணிப்பு பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று தொடங்கி வைத்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் மகத்தான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆக.5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இத்திட்டம் மூலம் இதுவரை 46.38 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் ஒன்றான நோய் ஆதரவு சிகிச்சை சேவையை வழங்கும் வகையில் வலி நிவாரண மையம், நோய் தணிப்பு பிரிவை தொடங்கி வைத்துள்ளோம்.

இங்கு 15 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு உள்ளது. உடல் முழுவதும் ஏற்படும் நரம்பு வலிக்கான சிகிச்சை, நாள்பட்ட புற்றுநோய் வலி உட்பட எல்லாவிதமான வலிகளுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். சிறப்பு சிகிச்சைகளான வலி நரம்புகளை கட்டுப்படுத்துதல், முடக்குதல், ரேடியோ அலை நரம்பு சிதைப்பு சிகிச்சை, வலி இருக்கும் குறிப்பிட்ட பகுதிக்கு வலி நிவாரண மருந்து செலுத்துதல், தொடர்ந்து வலி நிவாரண மருந்து அளித்தல் உள்ளிட்ட அனைத்து வலி நிவாரண சிகிச்சைகளும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.

அதிநவீன அல்ட்ராசவுண்ட் கருவி, ரத்தத்தில் உயிர்வேதியியல் அளவுகளைத் துல்லியமாக கணக்கிடும் தானியங்கி கருவி இங்கு நிறுவப்பட்டுள்ளன. ரூ.40லட்சம் மதிப்பிலான இத்திட்டத்துக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் ரூ.15 லட்சம், சென்னை ரோட்டரி கிளப் ரூ.7 லட்சம் வழங்கி உதவியுள்ளனர். அவர்களுக்கு நன்றி.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், ஆலோசனைகளை மருத்துவர்கள், தன்னார்வலர் குழுவினர் வழங்கி வருகின்றனர்.

கேரளாவிலும், கர்நாடகாவிலும் குறிப்பாக பெங்களூரு நகரத்திலும் கரோனா பரவல் அதிகமாகஉள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து 13 வழிகள் மூலமாக கோவைக்கு பயணிகள் வருகின்றனர். எனவே, எல்லை பகுதிகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்கள் படிக்க வசதி உள்ளது. ஆனால், 100 பேருக்கு மட்டுமே சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதனால், மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் 50 மாணவர்களை அந்த மருத்துவக் கல்லூரியில் சேர்க்கலாம் என ஆலோசனை கூறியுள்ளோம். மத்திய அரசும் ஒப்புதல் தரும் நிலையில் உள்ளது. இந்தக் கல்வி ஆண்டிலேயே மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி, அபிராமி ராமநாதன், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT