கரோனா பரவல் அதிகரிப்பால், கோவை சரக சிறைகளில் கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை சரக சிறைத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோவை, சேலம் ஆகிய இடங்களில் மத்திய சிறைகள் உள்ளன. இங்கு விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவுக் கைதிகள் என2,900-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, மாவட்ட சிறைகள், கிளைச்சிறைகளில் 500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக, தண்டனைக் கைதிகளை செவ்வாய், வியாழக்கிழமை களிலும், விசாரணைக் கைதிகளை திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளிலும் உறவினர்கள் சந்தித்து பேசலாம். தற்போது கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து, சிறை நிர்வாகத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதுதொடர்பாக, கோவை சரகசிறைத்துறை டிஐஜி சண்முகசுந்த ரம் ‘இந்துதமிழ்திசை’ செய்தியாளரி டம் கூறும்போது, ‘‘கரோனா பரவல் அச்சத்தால் கோவை, சேலம் மத்திய சிறைகள் உட்பட, கோவை சரக சிறைகளில் கைதிகளை பார்வையாளர்கள் நேரடியாகசந்தித்து பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தநடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு பதில், மத்திய அரசின்‘இ-பிரிசன்ஸ்’ என்ற மென் பொருளை பயன்படுத்தி முன்பதிவுசெய்து கைதிகளிடம், அவர்களின்உறவினர்கள் வீடியோ அழைப்புமூலம் பேசலாம். இதற்கான வழிமுறைகள் கைதிகளின் உறவினர் களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
கோவை சரக சிறைகளில் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் முறையாக பின் பற்றப்படுகின்றன. கைதிகளுக்கு தலா இரண்டு முகக்கவசங்கள் வழங் கப்பட்டுள்ளன. சிறையில் கைதிகள் முகக்கவசம் அணிந்திருக்க உத்தர விடப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் உள்ள கைதிகள் தனியறைகளில் அடைக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. புதியதாக வரும் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் கிளைச் சிறைகளில் அடைக்கப்பட்டு, குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னரே, கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்படுகின்றனர். கைதிகளுக்கு கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், மூலிகை உள்ளிட்டவை சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன. கோவை, சேலம் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தண்டனைக் கைதிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.