திமுக கூட்டணியில் வி.சி.சந்திரகுமார் தலைமையிலான மக்கள் தேமுதிக இணைந்துள்ளது.
மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டோர் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியைத் தொடங்கினர். இந்தக் கட்சியில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் மக்கள் தேமுதிக இணைந்தால் வரவேற்போம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் அழைப்புவிடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சந்திரகுமார் உள்ளிட்ட மக்கள் தேமுதிக நிர்வாகிகள் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரும் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
பிறகு செய்தியாளர்களிடம் சந்திரகுமார் கூறியதாவது: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன் பேச்சு நடத்தினோம். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திமுக வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். திமுக கூட்டணியில் போட்டியிட தொகுதிகளைக் கேட்டுள்ளோம்.
இது தொடர்பாக செவ்வாய்க் கிழமை (இன்று) மீண்டும் கருணாநிதி, ஸ்டாலினுடன் பேச்சு நடத்துவோம். வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். எனவே, திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.
மக்கள் தேமுதிகவுக்கு 3 தொகுதிகளை வழங்க திமுக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.