தமிழகம்

பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடுவது சட்டவிரோதம் இல்லை: நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

பொள்ளாச்சியில் பெண்களு க்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி 2019-ல் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தினேன். இதில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.

இதேபோல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலையான சம்பவ த்தைக் கண்டித்தும், இதில் தொடர்புடைய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் 2020-ல் அனைத்துக் கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினேன்.

ஆனால், கரோனா தொற்று விதிகளை மீறி கரோனா பரப்பும் வகையில் போராட்டம் நடத்தியதாகவும் நான் உட்பட பலர் மீது போலீஸார் இரு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி களைக் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இது ஜனநாயக முறைப்படியான ஒரு போராட்டம். பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த போராட்டம்.

இதைச் சட்டவிரோதப் போராட்டமாகக் கருத முடியாது. இந்தப் போராட்டங்களால் கரோனா பரவியதற்கு ஆதாரம் இல்லை. எனவே மனுதாரர் மீதான இரு வழக்கும் ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT