கரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதில் சித்த மருத்துவம் முன்னோடியாக திகழ்கிறது என ஆம்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் வில்வநாதன் தெரிவித்தார்.
வேலூர் புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆம்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளி சார்பில், இலவச சித்த மருத்துவ முகாம், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகம் வழங்குதல் மற்றும் மூலிகை கண்காட்சி ஆம்பூர் ஈஸ்வராச்சாரி தெருவில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், புற்று மகரிஷி சமூக சேவை மையத்தின் தலைமை சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் வரவேற்றார். ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், இந்து பாரதிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் விமல்சந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அ.செ.வில்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மூலிகை கண்காட்சியை திறந்து வைத்தார்.
இதையடுத்து, பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து பெட்டகத்தை இலவசமாக வழங்கிப் எம்எல்ஏ வில்வநாதன் பேசும்போது, ‘‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா பெருந்தொற்று தமிழகத்தில் வேகமாக பரவியபோது மக்களை நோய் பிடியில் இருந்து காப்பாற்றியது சித்த மருத்துவம். சில ஆண்டுகளுக்கு முன்பு சித்த மருத்துவத்தை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கரோனா வந்த பிறகு சித்த மருத்துவம் தான் மக்களை பாதுகாப்பதில் முன்னோடியாக திகழ்கிறது.
இங்கு வழங்கப்படும் மூலிகை முகக்கவசம் ஒன்றை பயன்படுத்தி னாலே போதும், காய்ச்சல், தலை வலி, சளி தொந்தரவு உள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள். மூலிகை முகக்கவசம் அணிந்த சில நிமிடங்களிலேயே அதை அவர்கள் உணர்வார்கள். கரோனாவுக்கு கபசுர குடிநீர் சிறந்த தீர்வு என கண்டறியப்பட்டது திருப்பத்தூர் மாவட்டத்தில் தான். இன்று தமிழகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்ததால் மக்கள் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீரை எடுத்துக்கொள்கின்றனர். மக்கள் இது போன்ற இலவச மருத்துவ சித்த முகாம்களை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு நோய் தீர்க்கும் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு மூலிகை முகக்கவசம், மூலிகை செடிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், வாணியம்பாடி சித்த மருத்துவர் தமிழ்செல்வன், இந்து பாரதிய கல்வி அறக் கட்டளையின் தாளாளர் தீனதயாளன், துணைத்தலைவர் வெங்கடேஷ், இணைச்செயலாளர் ராஜேந்திரன், ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.