ஒட்டன்சத்திரம்: தக்காளி வரத்து அதிகரித்து வருவதால் சந்தைக்கு வரும் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், வீழ்ச்சிடைய வாய்ப்பு என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் தக்காளி அறுவடை அதிகளவில் நடப்பதால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து, விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ தக்காளி மொத்த மார்க்கெட்டில் ரூ.10க்கு விற்பனையாகும் நிலையில், மேலும் வரத்து அதிகரித்து, வெளி மார்க்கெட்டிலேயே ஒரு கிலோ ரூ.10க்கும் குறைவாக விற்பனையாக வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழநி, கள்ளிமந்தயம், வடமதுரை, வேடசந்தூர், அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. மழைக்காலத்தில் தக்காளி செடிகள் சேதமடைந்து வரத்து குறைந்தது. இதனால் இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100 வரை தக்காளி விற்பனையானது.
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் மழை குறைந்தபோதும், பனியின் தாக்கம் அதிகம் காரணமாக வரத்து குறைந்து காணப்பட்டதால் ஒரு கிலோ ரூ.80, 70 என விற்பனையானது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட தக்காளி செடிகள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இதனால் நாள்தோறும் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துவருகிறது. வரத்து அதிகம் காரணமாக கடந்த ஒருவாரமாகவே தக்காளி விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு பெட்டி தக்காளி (15 கிலோ) ரூ.150 க்கு விற்பனையானது. (ஒரு கிலோ ரூ.10). மொத்த மார்க்கெட்டில் ரூ.10க்கு விற்ற நிலையில் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.15 வரை விற்பனையானது.
விலைகுறைந்து விற்பனை: விவசாயிகள் கூறுகையில், ''இந்த ஆண்டு போதிய மழையால் தக்காளி செடியில் பழங்கள் காய்த்து குலுங்குகின்றன. வழக்கத்தை விட அதிக விளைச்சலும் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை, பனி குறைந்ததால் தக்காளி செடிக்கு ஏற்ற தட்பவெப்பநிலையென அளவான வெப்பம் காணப்படுகிறது. இதனால் சேதமின்றி விளையும் தக்காளிகள் அனைத்தும் மார்க்கெட்டிற்கு அனுப்பும் தரத்தில் உள்ளன. தினமும் மார்க்கெட்டிற்கு வழக்கத்தைவிட அதிக அளவில் தக்காளி கொண்டுவரப்படுவதால் விலை குறைந்து விற்பனையாகிறது. இந்தநிலை நீடித்தாலே தக்காளி பயிரிட, பராமரிப்புக்கான செலவு, மார்க்கெட்டிற்கு வாகனங்கள் கொண்டுவரும் செலவு, சுங்ககட்டணம், கமிஷன் தொகை அனைத்தையும் கழித்துப் பார்த்தால் மிச்சமாவது ஒன்றும் இல்லை'' என்றனர்.
மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.10: ஒட்டன்சத்திரம் காய்கறி கமிஷன் கடை உரிமையாளர் ஆறுமுகம் கூறுகையில், ''மழைக் காலம் முடிந்ததால் தக்காளி வரத்து அதிகரிகத் தொடங்கியுள்ளது. ஆனால் தேவை குறைவாகவே உள்ளது. இதனால் விலை குறைந்து விற்பனையாகிறது. தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ.150 க்கு விற்பனையாகிறது. தற்போதுள்ள நிலையில், தக்காளி வரத்து மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது. இதனால் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது. தற்போது மொத்த மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10 என்ற நிலையில், இனி வரும் வாரங்களில் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கும் குறைவாக கிடைக்க வாய்ப்புள்ளது'' என்றார்.
தக்காளி விலையில் தொடர் சரிவு ஏற்படும் என்ற நிலையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.