சென்னை: மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ் மொழிக்காக தங்களது உயிரை மாய்த்துக் கொண்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் இன்று அவர்களுக்கு மரியாதை செய்யப்படுவது வழக்கம்.
மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில், தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அவர்களது திருவுருப்படங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.